Archive

Posts Tagged ‘poem’

சமன்பாடு (The Equation)

July 21st, 2011 No comments

ஒரு சமன்பாட்டின் இரு பக்கங்கள் (Two sides of an equation). Poem war transcript from Blackriverpoets.com.

காமமில்லா காதல் அன்பானது
நோக்கமில்லா நட்பு வரமானது
தேடலில்லா பிறவி கடனானது!

பொய்யில்லா பெண்மை அழகானது
எதிபார்ப்பில்லா உறவு இன்பமானது
நோக்கமில்லா வாழ்க்கை வீணானது !

உயிரில்லா மெய் பிண்டமானது
மெய்யில்லா சேர்க்கை சாபமானது
உழைப்பில்லா உயர்வு தானமானது!

ஆக்கமில்லா கனவு சோர்வானது
கனவில்லா உள்ளம் வஞ்சகமானது
உணர்வில்லா உயிர் இழிவானது !

கருத்தில்லா வாக்கு குப்பையானது
மருந்தல்லா உணவு பிணியானது
விருந்தில்லா விழா விரயமானது!

பொருளில்லா வாதம் வினையானது
குணமில்லா மருந்து மண்ணானது
பயனில்லா சிகிச்சை சிக்கலானது !

சீற்றமில்லா சிந்தை சுகமானது
ஏற்றமில்லா செயல்கள் கனிவானது
மாற்றமில்லா மனம் மகிமையானது

ஏமாற்றமில்லா எண்ணம் உயர்வானது
போரில்லா உலகம் அமைதியானது
ஆசையில்லா உள்ளம் தூய்மையானது !

கல்வியில்லா இளமை சோகமானது
கேள்வியில்லா வாழ்க்கை கேலியானது
தோல்வியில்லா வெற்றி துன்பமானது

வாழ்வியல் இனிது..

June 30th, 2011 No comments

ஓரு அருமையான கவிதைப்போர், திரு பிரதிக் முரளி உடன்.  போர்க்களம் இங்கே.

வானமே எல்லை என்று சிறகடிக்கும் இளமை
வளமை மாறாது வண்ணங்கள் நிறைந்த கனவுகள்
மதிமந்திரிகளாக மனம் நிறைந்த நண்பர்கள்
வாழ்வியல் இனிக்குமோ இவையாவும் கிடைக்கப்பெறின்!

விளக்கம்: இளமையும், கனவுகளும், நல்ல நண்பர்களும் கிடைத்தால் வாழ்க்கை இனிமையாவது உறுதி!

நிரந்தரம் இதுவென வசந்தத்தின் தேனீக்கள் போல்
பறந்து திரியும் இளமை, முதுமையை அறியாது போலும் !
செழுமைமிகு கனா, கனாவாக நிலைக்க மதி மயங்கிய மாந்தர்கள்,
“வழுவிலா” நண்பராயின் வாழ்வியலும் இனித்தருளுமோ ?

வழுக்கியவனும் உயர்ந்தெழுவான்
தளர்ந்தவனும் தழைத்தெழுவான்
தன்னலம் பேணா பெருமான், நின் நண்பன்,
தன் தோள்யீன்று துணையிருந்தால்.

விளக்கம்: நல்லதொரு நட்பு ஒருவர்க்கு கிடைத்தால், என்ன துயரம் நேர்ந்தாலும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்

வழக்கொழிவான் நாம் விழி முன்னே !
அழுக்குடம்பை காலனும் விடுவானோ ?
கண் முன்னே மறைவான் ! அய்யகோ !
இளமையின் இடிபாடுகளுக்கிடையில் முதுமை !

உதித்ததன் நோக்கமதை உளமாற உணர்ந்தபின்
காலனின் கடமையினூடே புகமாட்டார் புத்திமார்
காலத்தே களம்காணும் ஞாலத்தேடல், அது
கனிந்தபின் காலக்குடுவையினுள் நின்றுரைக்கமாட்டார்.

விளக்கம்: பிறந்த காரணத்தை தெரிந்துக்கொண்டபின், அதை நிறைவேற்றி முடித்தப்பின் இவ்வையகத்தில் வேலையில்லை என்று உயர்ந்தவர்களுக்குத் தெரிந்ததால், அவர்கள் காலனாகிய தர்மராசனின் கடமைக்கு குறுக்கே நிற்கமாட்டார். காலாகாலத்தில் செய்யப்படவேண்டிய ஞானத்தேடலை புரிந்தவர்கள் அதையடைந்தபின் காலத்தின் கட்டுப்பாட்டினில் நின்றுக்கொண்டு வீண் வாதம் புரியமாட்டார்கள்.

ஆசையிலே அவசரமாய் பிறந்த நம்மோர்
அவனியிலே அவதி உற்றழிவார் திண்ணம் !
ஆற்றினிலே கால் கழுவ போகும் மாந்தர்
சேற்றினிலே மறு காலை நிறுத்தி வைப்பார் !!

உற்றவேடம் உடுத்திய தோலாடை
ஏற்ற இச்சையினாலே திண்ணமானது
எஞ்சிய பாத்திரம் அதை களைந்தப்பின்
மிஞ்சுவது எடையில்லா இருப்பு மட்டுமன்றோ!

விளக்கம்: ஒருவருடைய பிறவி அவருடைய ஆசையினாலேயே அமைகிறது. அவர் கொள்ளும் உடலும், அவருடைய பண்புகளும், குணாதிசியங்களும் அவர்தம் இச்சையினாலேயே கிடைக்கப்பெருகிறது. அவர் கொண்ட இப்பிறவிப்பயனை புரிந்துக்கொண்டு அதை அடைந்துவிட்டால், மீதம் இருப்பது வெறும் வெற்றிடம் மட்டுமே. அதில் இருப்பாக இருப்பது ஆன்மசோதி மட்டுமே. அச்சோதியில் ஐக்கியமாகி தாமே எல்லாவுமாகவும், எல்லாமே தாமாகவும் உணரமாட்டாரோ?

பொய் நின்ற ஞாலத்தே , பொல்லா ஒழுக்கொடு
வெறுப்போடு ஈகையை இச்சையுடன் காட்டாதே ,
வேடம் உற்ற இடத்தில் வேட்டையாடி ,
கர்மங்கள் சேர்ப்பாதே கருமமாய் திரிகின்றாரே !

ஈகையும் கர்மமேவென்று புறத்தே பொருளீட்டுவோர்
அகத்தே அறியப்படும் சோதிகண்டோர்க்கூற்று அறியாரோ?
பிரதிகர்மங்களினால் ஆட்கொண்ட சிறியார் தமக்கு
விகர்மமே சாலச்சிறந்த தர்மம்மென தெரியாரோ?

விளக்கம்: ஈதலும் ஒருவகையில் கர்மமேயாகும் என்ற அகத்திலே (உள் உணர்விலே) அறியப்படும் ஆன்மசோதியை கண்டவர்தம் விளக்கம், வெளியுலகில் பொருள் தேடுவோர் அறியமாட்டார்கள். செயல்களுக்கு எதிர்செயல்கள் செய்யும் போக்கால் உழன்ற அறிவிலார்க்கு, விகர்மமே (செய்லை செய்யாதிருத்தல்) சிறந்த ஒரே தர்ம மார்க்கம் என்று தெரிந்துதான் இருக்குமோ?

விதியில் சாக்கியர் சமணர் முண்டர் ஆரியர் சூரியர்
என விரியும் பாதியில் முளைத்த பற்பல சாதிகள் ,
தன்னெஞ்சு தன்னில் தொற்றினதே சொல்லுகையில்,
பத்மமெனத்திகழ் பரஞ்சோதியின் பைங்கழல் பிடிப்பதறியாரே !

அருளின் தழல்தனில் குறுகிக்கழல் பற்றினிற்றல்
சாத்திரம் படைத்தோர் மார்கத்தில் பக்தியாம்
பலனியற்றா கர்மம் விகர்மமேவென யோகமாம்
நன்நட்பியற்றல் நன்மகள் துணையிருத்தல் அதிலுச்சமாம்!

விளக்கம்: அருள் சோதியாக ஓங்கி உயர்ந்த பிழம்பின் கழல்தனை (பாதத்தினை) பற்றுதல், சாத்திரம் சொன்ன சான்றோர் வாக்கின்படி பக்திமார்க்கம் எனப்படும். பலனையே எதிர்பாராமல் கருத்தாகச் செய்யப்படும் கர்மமானது, கர்த்தாவை அண்டாது. அது கர்த்தாவிற்கு விகர்மமே (கர்மம் செய்யாத நிலை) ஆன கர்மயோகம் ஆகும். நல்ல நண்பர்களின் நட்பும், நல்ல தம் மனையாளே துணையாக கிடைத்தால், அது யோகத்தில் உச்சமாகும்.

நன்நட்பென்பதன் நற்பொருள் யாதும் காசிநியோர் உணராரே !
உடலுக்கே கரைந்து நைந்து தமக்கென்று வாழ்ந்து வீழ்வார் !
அடிமைத்திறமதன் பொருள் அறிவார், ஆண்டனை அறியாதாரிவர்,
கண்ணன் தாம் மொழிந்தவற்றை நீர் கூறினால் ஏற்பரோ ?

ஏற்பதற்கோ எம்மான் மொழிந்த ஞாலம்
ஏற்றவன் ஏற்றதன் கூற்று அறியுமுன்னே
ஏற்றம் கொள்ளவா அவணியில் எழுந்தேன்
எந்தை எமக்குரைத்த எதிர்வினைநோக்கா பகர்வு

விளக்கம்:
Tags: , ,

சட்டச் சட சட — மந்திரப் புன்னகை அறிவுமதியின் பாடல் வரிகள்

June 30th, 2011 No comments

மந்திரப் புன்னகை என்ற படத்தில் “சட்டச் சட சடவென மழை முளைக்கும்..” என்ற பாடல் மிகச்சிறப்பான பாடல்வரிகளை கொண்டதாக இருக்கிறது. அறிவுமதி, இப்பாடலில் காதல் ரசத்தை பிழிந்து அமுது சமைத்திருக்கிறார். இப்பாடலில் வரும் சில வரிகள் உணர்ச்சிகளை வரிகளில் முழுதாக ஏற்றமுடியும் என்பதற்கு சான்றாக இருக்கிறது. அறிவுமதி தேர்ந்தெடுத்துள்ள வார்த்தகை அனைத்தும் அறுமையிலும் அறுமை. பாடலை கேட்கும்போது, வாசிக்கும்போது அவர் தெளித்த உணர்ச்சிப் பூக்களை முழுதாக உள்வாங்கி அனுபவிக்க முடிகிறது. வித்யாசாகரின் இசையில் சந்தி சங்கதி சுத்தியாக பாடல் அமைத்திருக்கிறது.

இந்த மௌனத்தை நான் அடைய,
எத்தனை வார்த்தைகள் கடந்துவந்தேன்…

மௌனத்தில் ஆரம்பித்து மௌனத்தில் முடித்தல் சிறப்பன்று. சத்தத்திற்கு பின் தான் மௌனம் என்பதை அழகாக சொல்கிறார்.

ஊஞ்சல் கேட்டேன் நான் தானே
தோள்கள் தந்தாய் நீ தானே

காதலன் காதலி உரசலில் தேகங்கள் தேய்ந்தாலும் தேடுதல் குறைவதில்லை என்பதை உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்!

ஒரு விரல் வருடிட
ஒரு விரல் இறுகிட
இரு நிழல் திறுகிட தகதிமிதா..

இதைவிட நெருக்கத்தில் இருக்கும் காதலர்களின் உணர்ச்சியை அழகுபடுத்தி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை!

இதழிலே வெயில் மழை
உரியுதே உயிர் கிளை
இடையிலே புதுச் சுமை..

“இடையிலே புதுச் சுமை”, அட அருமை அருமை அருமை!

OOPS: Delayed Instantiation

March 17th, 2011 No comments

பலன் கருதி பொருள் ஈட்டல்
நலம் பேணும் நன்முறையாம்
பொருள் சேர்க்கும் நன்மக்கள்
காலத்தே ஈட்டி பலம் கொள்வாரே!

நேனு நூவண்ட்டு வேரய் புனா… (படம்: அரஞ்ச், தெலுங்கு, 2010)

January 11th, 2011 No comments

இந்த பாடலில் மெட்டு எனக்கு மிகவும் பிடித்தது, ஹாரிஸ் ஜெயராஜ் என்றால் சொல்லத்தான் வேண்டுமோ? கீழே என்னுடைய பாடல் வரிகளை தொகுத்துள்ளேன். அசல் பாடலின் அர்த்தம் எனக்கு தெரியாது, எனக்குத் தோன்றிய கருத்தை மெட்டில் அமர்த்தியிருக்கிறேன்.

(பல்லவி)
சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

உந்தன் பார்வையாலே இங்கு பெண்ணாகி,
உந்தன் வார்த்தை கேட்டு உளம் ஒன்றாகி;
எந்நெஞ்சுக் கூட்டில் உன்னை வைத்தேனே..

என் பார்வை என்றுமே உனைத்தேட,
உன் பார்வை பார்த்தும் ஒளிந்தோட,
என் கண்ணக்குழியில் உன்னை விதைத்தேனே..

சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

(சரணம் 1)
துணை வரும் உந்தன் கரம்
நிந்தோளில் சாயும் எந்தன் சிரம்
பாதை தோறும் உன்னால் என்றும் பூங்கா வனம்..

தேங்கும் எந்தன் அன்பின் வளம்
சேரும் இடம் உந்தன் அகம்
நம் மனம் சேரும் வாழ்வில் என்றும் சுகம் தினம்..

என் கனவில் வருவது எல்லாம்
உன் முகம்தான்
வேறில்லை
கண் விழித்து பார்ப்பதும் உன்னை
உன் அன்பின் அணைப்பில் இன்னல் மறப்பேனே..

(பல்லவி)
மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

(சரணம் 2)
துணை வரும் உந்தன் கரம் (to be replaced)
நிந்தோளில் சாயும் எந்தன் சிரம்
பாதை தோறும் உன்னால் என்றும் பூங்கா வனம்..

தேங்கும் எந்தன் அன்பின் வளம் (to be replaced)
சேரும் இடம் உந்தன் அகம்
நம் மனம் சேரும் வாழ்வில் என்றும் சுகம் தினம்..

கண் மணியில் இருப்பதும் நீதான்
என் தலைவா
பொய்யில்லை
நான் போகும் திசையெல்லாம் நீதான்
என் பாதை என்றும் உன்னை சார்ந்தேதான்..

(பல்லவி)
சாலை எங் கெங்கும்
உன்னை தேடும்
என்
விழியில்
தூறல் துளிகள் உருகுதே,
உனை
நாடித் தழுவ தவிக்குதே,
மனம்
கொள்ளை கொண்ட என் கள்வனே…

மோகம் கசிந் துருகும்
மாலை நேரம்,
உன்
நிழலின்
பிம்பம் பற்றி நின்றேனே,
உனை
சொந்தம் என்று கொண்டனே,
வரம்(ந்)
தன்னை தந்த என் மன்னனே…

உந்தன் பார்வையாலே இங்கு பெண்ணாகி,
உந்தன் வார்த்தை கேட்டு உளம் ஒன்றாகி;
எந்நெஞ்சுக் கூட்டில் உன்னை வைத்தேனே..

என் பார்வை என்றுமே உனைத்தேட,
உன் பார்வை பார்த்தும் ஒளிந்தோட,
என் கண்ணக்குழியில் உன்னை விதைத்தேனே..

(standby)
தினம் உன்னை காணவே துடிப்பேனே
உந்தன் உள்ளங் கையினுள் புதைவேனே
மானம் காக்கும் வீரம் உனதாமோ?

Powered by ScribeFire.

Tags: , , , ,

கோபிநாத்திற்கு திருமண வாழ்த்து

June 17th, 2010 No comments

நல்லோரே
நீவிர் நித்தம்
நன் நினைவுகளுடன்,
நற்செல்வமீட்டி,
நன் மக்களீன்று,
நற்றுணை நல்க.

காதல்

March 6th, 2010 No comments

கீழ் கண்ட இப்பாடலை “கோவா” படத்தில் வரும் “இது வரை” என்ற பாடலின் மெட்டில் பாடி பார்க்கவும்.

இருவிழி கொண்டாடும் கனவிது;
இதயத்தில் நின்றாடும் இசையிது;
கருத்தினில் கண்மூடி கரைந்திட காத்து கிடந்தேனே.. (2)

தூங்காமல் தூங்கி சரிந்தது,
பார்க்காமல் பார்க்க துடித்தது,
பேசாமல் பேசி ரசித்தது,
அன்றே ??
தீண்டாமல் தீண்டி தவித்தது,
தாண்டாமல் தாண்டி சிரித்தது,
வேண்டாமல் வேண்டி கொடுத்தது,
இன்றே ??

உள்ளத்துள்ளே உன்னைத்தேடி அலைய,
உன்னைக்கண்டு உலகத்தை மறக்க,
உயிரிலும் உணர்விலும் கலந் திருந்தாயே..
எண்ணத்துள்ளே என்னையறியாமல் தாண்டவமாடி களித்தாய்,
என்னை தூங்கவிடாமல் துளிர்த்தாய்,
இதுசுகமென வேண்டி என்னைத்தேடி தொலைந்தேனே..

எண்ணங்களின் எல்லையிலே இருந்தேன்,
எல்லைதாண்டும் உந்தன் உணர்வறிந்தேன்,
எனைத்தேடும் உந்தன்பார்வை ஆட் கொள்ளுதே..
என்னையீர்க்கும் உன்னுடைய அன்பு என்னைமீறி செல்லும்,
அது என்னை உன்னடி சேர்க்கும்,
இதுசுகமென வேண்டி என்னைத்தந்து களித்தேனே..

சிறகெனும் சிற்றாடை சுகமிது;
பிறவியின் பற்றான துதியிது;
உறவினில் உன்னோடு உறைந்திட ஏங்கி தரித்தேனே.. (2)

பாவை நான்-உன்னகம் விழுந்தேன்,
பார்வை-அதை உன்னிடம் தொலைத்தேன்,
பூவை-நான் எனமனம் துறந்தேன்,
இன்றே! .. (2)

Powered by ScribeFire.