Archive

Archive for the ‘Literature’ Category

போதையானர் (Vs Pythagoras)

September 7th, 2015 No comments

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே

Premise: Consider the Running length of the base of a right-angle triangle as “a” and the standing height “b” and hypotenuse is “c”. As per Pythagoras theorem we have c2 = a2 + b2[Update] Ensure that the triangle is rotated to have the base side longer than the height side.

Proof:  As per the poem we have to consider (7/8) of the base length, that is  (7a/8) and half of the height, which is (b/2) and sum them up to get the hypotenuse “c”

We have (7/8)a + (1/2)b = c => 7a + 4b = 8c.

Consider an easy example of 3, 4 and 5.  By Bodhaiyanar, we get 7*4+4*3 = 40 = 8*5 => c = 5.  We were able to find the hypotenuse without using square root operator in constant time.

Caveat: This algorithm works only for whole number hypotenuse values.  For others, it gives a quick and approximate estimate.

நட்பு

December 11th, 2014 No comments

நற்றுணையாயின் நன் நட்பு,
நோக்கம் நெறிபட நிமிர்ந்து நிற்குமாமே!
நீறூற்றாயின் நின் அன்பு,
லோகம் பொடிபட விரைந்து வெல்லுமாமே!

அன்பு

December 11th, 2014 No comments

பிந்தியாவின் தமிழ் வீட்டுபாடத்திற்காக எழுதியது:

தாயின் அன்பு பாசமானது,
தந்தையின் அன்பு அறிவானது,
குருவின் அன்பு கல்வியானது,
தெய்வத்தின் அன்பு வாழ்வானது,
அன்பு நிறைந்த மனிதம் இறைவனாவது திண்ணமே!!

பாடல்கள் கேட்கும்போது காதலுணர்வு வருமா?

April 16th, 2013 No comments
புறத்தே புலனால் அரும்பும் காமம்;
அகத்தே ஆழத்தே ஊறும் அன்பு;
காமத்தோடு இசைந்த அன்பு காதலாகிவிட,
செவியோடு கசியும் இனிய பாடல் ஒன்று
அக்காதலை தூண்டுவது நியாயம்தானே!
Tags: , , , ,

கனா கண்டேன்..

June 22nd, 2012 No comments

மதியினில் மாயமென மனதினில் மோகமென
மதியாய் முன்னிறங்கி மோன முடைபட
மத்தியில் மூச்சுமின்றி மத்தாய் முறுங்கிட
முக்தியில் நின்பிறைதனில் மறை கண்டேனே!

Tags: , , , ,

காமம்

February 19th, 2012 No comments

காயத்தின்பாற் கொண்ட காமத்தினாலே,
மாயத்திரைமேவும் மனோ சாயம்,
மோனத்தில் மிஞ்சுமோ ஏகோச்சாரம்,
ஞானத்தின்பாற் கற்றுணரப் பணிந்தேனே.

சமன்பாடு (The Equation)

July 21st, 2011 No comments

ஒரு சமன்பாட்டின் இரு பக்கங்கள் (Two sides of an equation). Poem war transcript from Blackriverpoets.com.

காமமில்லா காதல் அன்பானது
நோக்கமில்லா நட்பு வரமானது
தேடலில்லா பிறவி கடனானது!

பொய்யில்லா பெண்மை அழகானது
எதிபார்ப்பில்லா உறவு இன்பமானது
நோக்கமில்லா வாழ்க்கை வீணானது !

உயிரில்லா மெய் பிண்டமானது
மெய்யில்லா சேர்க்கை சாபமானது
உழைப்பில்லா உயர்வு தானமானது!

ஆக்கமில்லா கனவு சோர்வானது
கனவில்லா உள்ளம் வஞ்சகமானது
உணர்வில்லா உயிர் இழிவானது !

கருத்தில்லா வாக்கு குப்பையானது
மருந்தல்லா உணவு பிணியானது
விருந்தில்லா விழா விரயமானது!

பொருளில்லா வாதம் வினையானது
குணமில்லா மருந்து மண்ணானது
பயனில்லா சிகிச்சை சிக்கலானது !

சீற்றமில்லா சிந்தை சுகமானது
ஏற்றமில்லா செயல்கள் கனிவானது
மாற்றமில்லா மனம் மகிமையானது

ஏமாற்றமில்லா எண்ணம் உயர்வானது
போரில்லா உலகம் அமைதியானது
ஆசையில்லா உள்ளம் தூய்மையானது !

கல்வியில்லா இளமை சோகமானது
கேள்வியில்லா வாழ்க்கை கேலியானது
தோல்வியில்லா வெற்றி துன்பமானது

வாழ்வியல் இனிது..

June 30th, 2011 No comments

ஓரு அருமையான கவிதைப்போர், திரு பிரதிக் முரளி உடன்.  போர்க்களம் இங்கே.

வானமே எல்லை என்று சிறகடிக்கும் இளமை
வளமை மாறாது வண்ணங்கள் நிறைந்த கனவுகள்
மதிமந்திரிகளாக மனம் நிறைந்த நண்பர்கள்
வாழ்வியல் இனிக்குமோ இவையாவும் கிடைக்கப்பெறின்!

விளக்கம்: இளமையும், கனவுகளும், நல்ல நண்பர்களும் கிடைத்தால் வாழ்க்கை இனிமையாவது உறுதி!

நிரந்தரம் இதுவென வசந்தத்தின் தேனீக்கள் போல்
பறந்து திரியும் இளமை, முதுமையை அறியாது போலும் !
செழுமைமிகு கனா, கனாவாக நிலைக்க மதி மயங்கிய மாந்தர்கள்,
“வழுவிலா” நண்பராயின் வாழ்வியலும் இனித்தருளுமோ ?

வழுக்கியவனும் உயர்ந்தெழுவான்
தளர்ந்தவனும் தழைத்தெழுவான்
தன்னலம் பேணா பெருமான், நின் நண்பன்,
தன் தோள்யீன்று துணையிருந்தால்.

விளக்கம்: நல்லதொரு நட்பு ஒருவர்க்கு கிடைத்தால், என்ன துயரம் நேர்ந்தாலும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்

வழக்கொழிவான் நாம் விழி முன்னே !
அழுக்குடம்பை காலனும் விடுவானோ ?
கண் முன்னே மறைவான் ! அய்யகோ !
இளமையின் இடிபாடுகளுக்கிடையில் முதுமை !

உதித்ததன் நோக்கமதை உளமாற உணர்ந்தபின்
காலனின் கடமையினூடே புகமாட்டார் புத்திமார்
காலத்தே களம்காணும் ஞாலத்தேடல், அது
கனிந்தபின் காலக்குடுவையினுள் நின்றுரைக்கமாட்டார்.

விளக்கம்: பிறந்த காரணத்தை தெரிந்துக்கொண்டபின், அதை நிறைவேற்றி முடித்தப்பின் இவ்வையகத்தில் வேலையில்லை என்று உயர்ந்தவர்களுக்குத் தெரிந்ததால், அவர்கள் காலனாகிய தர்மராசனின் கடமைக்கு குறுக்கே நிற்கமாட்டார். காலாகாலத்தில் செய்யப்படவேண்டிய ஞானத்தேடலை புரிந்தவர்கள் அதையடைந்தபின் காலத்தின் கட்டுப்பாட்டினில் நின்றுக்கொண்டு வீண் வாதம் புரியமாட்டார்கள்.

ஆசையிலே அவசரமாய் பிறந்த நம்மோர்
அவனியிலே அவதி உற்றழிவார் திண்ணம் !
ஆற்றினிலே கால் கழுவ போகும் மாந்தர்
சேற்றினிலே மறு காலை நிறுத்தி வைப்பார் !!

உற்றவேடம் உடுத்திய தோலாடை
ஏற்ற இச்சையினாலே திண்ணமானது
எஞ்சிய பாத்திரம் அதை களைந்தப்பின்
மிஞ்சுவது எடையில்லா இருப்பு மட்டுமன்றோ!

விளக்கம்: ஒருவருடைய பிறவி அவருடைய ஆசையினாலேயே அமைகிறது. அவர் கொள்ளும் உடலும், அவருடைய பண்புகளும், குணாதிசியங்களும் அவர்தம் இச்சையினாலேயே கிடைக்கப்பெருகிறது. அவர் கொண்ட இப்பிறவிப்பயனை புரிந்துக்கொண்டு அதை அடைந்துவிட்டால், மீதம் இருப்பது வெறும் வெற்றிடம் மட்டுமே. அதில் இருப்பாக இருப்பது ஆன்மசோதி மட்டுமே. அச்சோதியில் ஐக்கியமாகி தாமே எல்லாவுமாகவும், எல்லாமே தாமாகவும் உணரமாட்டாரோ?

பொய் நின்ற ஞாலத்தே , பொல்லா ஒழுக்கொடு
வெறுப்போடு ஈகையை இச்சையுடன் காட்டாதே ,
வேடம் உற்ற இடத்தில் வேட்டையாடி ,
கர்மங்கள் சேர்ப்பாதே கருமமாய் திரிகின்றாரே !

ஈகையும் கர்மமேவென்று புறத்தே பொருளீட்டுவோர்
அகத்தே அறியப்படும் சோதிகண்டோர்க்கூற்று அறியாரோ?
பிரதிகர்மங்களினால் ஆட்கொண்ட சிறியார் தமக்கு
விகர்மமே சாலச்சிறந்த தர்மம்மென தெரியாரோ?

விளக்கம்: ஈதலும் ஒருவகையில் கர்மமேயாகும் என்ற அகத்திலே (உள் உணர்விலே) அறியப்படும் ஆன்மசோதியை கண்டவர்தம் விளக்கம், வெளியுலகில் பொருள் தேடுவோர் அறியமாட்டார்கள். செயல்களுக்கு எதிர்செயல்கள் செய்யும் போக்கால் உழன்ற அறிவிலார்க்கு, விகர்மமே (செய்லை செய்யாதிருத்தல்) சிறந்த ஒரே தர்ம மார்க்கம் என்று தெரிந்துதான் இருக்குமோ?

விதியில் சாக்கியர் சமணர் முண்டர் ஆரியர் சூரியர்
என விரியும் பாதியில் முளைத்த பற்பல சாதிகள் ,
தன்னெஞ்சு தன்னில் தொற்றினதே சொல்லுகையில்,
பத்மமெனத்திகழ் பரஞ்சோதியின் பைங்கழல் பிடிப்பதறியாரே !

அருளின் தழல்தனில் குறுகிக்கழல் பற்றினிற்றல்
சாத்திரம் படைத்தோர் மார்கத்தில் பக்தியாம்
பலனியற்றா கர்மம் விகர்மமேவென யோகமாம்
நன்நட்பியற்றல் நன்மகள் துணையிருத்தல் அதிலுச்சமாம்!

விளக்கம்: அருள் சோதியாக ஓங்கி உயர்ந்த பிழம்பின் கழல்தனை (பாதத்தினை) பற்றுதல், சாத்திரம் சொன்ன சான்றோர் வாக்கின்படி பக்திமார்க்கம் எனப்படும். பலனையே எதிர்பாராமல் கருத்தாகச் செய்யப்படும் கர்மமானது, கர்த்தாவை அண்டாது. அது கர்த்தாவிற்கு விகர்மமே (கர்மம் செய்யாத நிலை) ஆன கர்மயோகம் ஆகும். நல்ல நண்பர்களின் நட்பும், நல்ல தம் மனையாளே துணையாக கிடைத்தால், அது யோகத்தில் உச்சமாகும்.

நன்நட்பென்பதன் நற்பொருள் யாதும் காசிநியோர் உணராரே !
உடலுக்கே கரைந்து நைந்து தமக்கென்று வாழ்ந்து வீழ்வார் !
அடிமைத்திறமதன் பொருள் அறிவார், ஆண்டனை அறியாதாரிவர்,
கண்ணன் தாம் மொழிந்தவற்றை நீர் கூறினால் ஏற்பரோ ?

ஏற்பதற்கோ எம்மான் மொழிந்த ஞாலம்
ஏற்றவன் ஏற்றதன் கூற்று அறியுமுன்னே
ஏற்றம் கொள்ளவா அவணியில் எழுந்தேன்
எந்தை எமக்குரைத்த எதிர்வினைநோக்கா பகர்வு

விளக்கம்:
Tags: , ,

சட்டச் சட சட — மந்திரப் புன்னகை அறிவுமதியின் பாடல் வரிகள்

June 30th, 2011 No comments

மந்திரப் புன்னகை என்ற படத்தில் “சட்டச் சட சடவென மழை முளைக்கும்..” என்ற பாடல் மிகச்சிறப்பான பாடல்வரிகளை கொண்டதாக இருக்கிறது. அறிவுமதி, இப்பாடலில் காதல் ரசத்தை பிழிந்து அமுது சமைத்திருக்கிறார். இப்பாடலில் வரும் சில வரிகள் உணர்ச்சிகளை வரிகளில் முழுதாக ஏற்றமுடியும் என்பதற்கு சான்றாக இருக்கிறது. அறிவுமதி தேர்ந்தெடுத்துள்ள வார்த்தகை அனைத்தும் அறுமையிலும் அறுமை. பாடலை கேட்கும்போது, வாசிக்கும்போது அவர் தெளித்த உணர்ச்சிப் பூக்களை முழுதாக உள்வாங்கி அனுபவிக்க முடிகிறது. வித்யாசாகரின் இசையில் சந்தி சங்கதி சுத்தியாக பாடல் அமைத்திருக்கிறது.

இந்த மௌனத்தை நான் அடைய,
எத்தனை வார்த்தைகள் கடந்துவந்தேன்…

மௌனத்தில் ஆரம்பித்து மௌனத்தில் முடித்தல் சிறப்பன்று. சத்தத்திற்கு பின் தான் மௌனம் என்பதை அழகாக சொல்கிறார்.

ஊஞ்சல் கேட்டேன் நான் தானே
தோள்கள் தந்தாய் நீ தானே

காதலன் காதலி உரசலில் தேகங்கள் தேய்ந்தாலும் தேடுதல் குறைவதில்லை என்பதை உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்!

ஒரு விரல் வருடிட
ஒரு விரல் இறுகிட
இரு நிழல் திறுகிட தகதிமிதா..

இதைவிட நெருக்கத்தில் இருக்கும் காதலர்களின் உணர்ச்சியை அழகுபடுத்தி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை!

இதழிலே வெயில் மழை
உரியுதே உயிர் கிளை
இடையிலே புதுச் சுமை..

“இடையிலே புதுச் சுமை”, அட அருமை அருமை அருமை!

மூன்றாவது கண்

March 7th, 2011 No comments
மூன்றாவது கண் என்றாலே அது ஈசனின் நெற்றிக்கண்தான் என்றும், அது உலகை அழிப்பதற்காகவே திறக்கும் என்றும் கூறுவர். ஆனால் மூன்றாவது கண் என்பது, மூன்றாவது கண்ணோட்டத்தை குறிக்கும். நாம் ஒரு செயலை தானாகச் செய்யும்போதும், மற்றவருடன் சேர்ந்து செய்யும்போதும், நமக்கு தன்னிலை, முன்னிலை தோற்றங்களே நினைவில் இருக்கின்றன. தன்னிலையில் மட்டும் செயல்படுவோர், சுயநலவாதிகள் என இச்சமுதாயம் சொல்லும். முன்னிலையில் மட்டும் செயல்படுவோர், நன்மக்கள், தியாகிகள் என்றும் சான்றோர் என்றும் இச்சமுதாய அமைப்பால் போற்றப்படுவர். ஆனால் சுயமுன்னேற்றம் அடைய விரும்புவோர், ஞானனிலை அடைய விரும்புவோர் தன்னிலை, முன்னிலையில் இல்லாமல் படர்க்கையில் பகுத்திறிவார்.

ஒரு உதாரணம் எடுத்துக்கொள்வோம். இரண்டு பேர் தங்களுக்குள் உள்ள மாற்றுகருத்தை தர்க்கம் செய்கிறார் என்று கொள்வோம். அவர்கள், தத்தம் நிலைபாட்டில் இருந்து நகரப்போவதில்லை, அவர்களுக்கும் ஒரு ஒப்பந்தம் வரப்போவதுமில்லை. அதையும்தாண்டி ஒரு தீர்வுக்கு என்ன செய்வார்கள்? ஏதாவது ஒரு பொதுவான, நம்பிக்கைக்குறிய ஒருவரின் உதவியை நாடுவார்கள். அவரால் மட்டும் எப்பது ஒரு தீர்வை கொடுக்கமுடிகிறது? அவர், இந்த இருவரின் நிலையிலிருந்தும் விலகி, மூன்றாவது பார்வையில் தீர்வைத்தேடுகிறார்.

நாமே அந்த இருவரில் ஒருவராக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவ்விருவர் என்ன செய்தாரோ அதேதான். ஆனால், ஞானவழியில் செல்வோர், மற்றும் கர்மயோகம் பழகுவோர் வேறுவிதமாகச் செயல்படுவார். அவர்கள், தன்னிலை, முன்னியிலிருந்து விலகி, படர்க்கையில் தீர்வைத்தேடுவர். தன்னிலையிலிந்து விலகி, தன்னை பாதிக்கமல் இருந்தால், எந்தவொரு கேள்விக்கும் பதில் எளிதில் கிட்டும். ஒருவருக்கு முன்றாவது கண் திறந்துவிட்டால், எல்லாமே ஒன்றுதான் எனத் தெளிந்துவிடும். அவர், எதனாலும் பாதிக்கப்படமாட்டார், மனதில் இயல்பு நிலையாம், அமைதியில் (பிரம்மம் என்றும் கூறுவர்) ஆழ்ந்திருப்பர், ஆனந்தித்திருப்பர்.

சரி, அப்போது என் ஈசனின் மூன்றாவது கண் அழிவைதரும் என்றார். இங்கு அழிவு என்பது, “நான்” என்ற எண்ணத்திற்கு. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் “தான்” யார் என்ற விழிப்பு வந்துவிட்டால் என்ன ஆகும். பிறப்பு இருக்காது, எல்லா ஆத்துமாக்களும் அதனுடைய மூலத்தை அடைந்துவிடும், உலகம் உயிரற்றதாகும், அதாவது அழிந்துபோயிருக்கும்.