Home > Uncategorized > வாழ்வியல் இனிது..

வாழ்வியல் இனிது..

ஓரு அருமையான கவிதைப்போர், திரு பிரதிக் முரளி உடன்.  போர்க்களம் இங்கே.

வானமே எல்லை என்று சிறகடிக்கும் இளமை
வளமை மாறாது வண்ணங்கள் நிறைந்த கனவுகள்
மதிமந்திரிகளாக மனம் நிறைந்த நண்பர்கள்
வாழ்வியல் இனிக்குமோ இவையாவும் கிடைக்கப்பெறின்!

விளக்கம்: இளமையும், கனவுகளும், நல்ல நண்பர்களும் கிடைத்தால் வாழ்க்கை இனிமையாவது உறுதி!

நிரந்தரம் இதுவென வசந்தத்தின் தேனீக்கள் போல்
பறந்து திரியும் இளமை, முதுமையை அறியாது போலும் !
செழுமைமிகு கனா, கனாவாக நிலைக்க மதி மயங்கிய மாந்தர்கள்,
“வழுவிலா” நண்பராயின் வாழ்வியலும் இனித்தருளுமோ ?

வழுக்கியவனும் உயர்ந்தெழுவான்
தளர்ந்தவனும் தழைத்தெழுவான்
தன்னலம் பேணா பெருமான், நின் நண்பன்,
தன் தோள்யீன்று துணையிருந்தால்.

விளக்கம்: நல்லதொரு நட்பு ஒருவர்க்கு கிடைத்தால், என்ன துயரம் நேர்ந்தாலும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்

வழக்கொழிவான் நாம் விழி முன்னே !
அழுக்குடம்பை காலனும் விடுவானோ ?
கண் முன்னே மறைவான் ! அய்யகோ !
இளமையின் இடிபாடுகளுக்கிடையில் முதுமை !

உதித்ததன் நோக்கமதை உளமாற உணர்ந்தபின்
காலனின் கடமையினூடே புகமாட்டார் புத்திமார்
காலத்தே களம்காணும் ஞாலத்தேடல், அது
கனிந்தபின் காலக்குடுவையினுள் நின்றுரைக்கமாட்டார்.

விளக்கம்: பிறந்த காரணத்தை தெரிந்துக்கொண்டபின், அதை நிறைவேற்றி முடித்தப்பின் இவ்வையகத்தில் வேலையில்லை என்று உயர்ந்தவர்களுக்குத் தெரிந்ததால், அவர்கள் காலனாகிய தர்மராசனின் கடமைக்கு குறுக்கே நிற்கமாட்டார். காலாகாலத்தில் செய்யப்படவேண்டிய ஞானத்தேடலை புரிந்தவர்கள் அதையடைந்தபின் காலத்தின் கட்டுப்பாட்டினில் நின்றுக்கொண்டு வீண் வாதம் புரியமாட்டார்கள்.

ஆசையிலே அவசரமாய் பிறந்த நம்மோர்
அவனியிலே அவதி உற்றழிவார் திண்ணம் !
ஆற்றினிலே கால் கழுவ போகும் மாந்தர்
சேற்றினிலே மறு காலை நிறுத்தி வைப்பார் !!

உற்றவேடம் உடுத்திய தோலாடை
ஏற்ற இச்சையினாலே திண்ணமானது
எஞ்சிய பாத்திரம் அதை களைந்தப்பின்
மிஞ்சுவது எடையில்லா இருப்பு மட்டுமன்றோ!

விளக்கம்: ஒருவருடைய பிறவி அவருடைய ஆசையினாலேயே அமைகிறது. அவர் கொள்ளும் உடலும், அவருடைய பண்புகளும், குணாதிசியங்களும் அவர்தம் இச்சையினாலேயே கிடைக்கப்பெருகிறது. அவர் கொண்ட இப்பிறவிப்பயனை புரிந்துக்கொண்டு அதை அடைந்துவிட்டால், மீதம் இருப்பது வெறும் வெற்றிடம் மட்டுமே. அதில் இருப்பாக இருப்பது ஆன்மசோதி மட்டுமே. அச்சோதியில் ஐக்கியமாகி தாமே எல்லாவுமாகவும், எல்லாமே தாமாகவும் உணரமாட்டாரோ?

பொய் நின்ற ஞாலத்தே , பொல்லா ஒழுக்கொடு
வெறுப்போடு ஈகையை இச்சையுடன் காட்டாதே ,
வேடம் உற்ற இடத்தில் வேட்டையாடி ,
கர்மங்கள் சேர்ப்பாதே கருமமாய் திரிகின்றாரே !

ஈகையும் கர்மமேவென்று புறத்தே பொருளீட்டுவோர்
அகத்தே அறியப்படும் சோதிகண்டோர்க்கூற்று அறியாரோ?
பிரதிகர்மங்களினால் ஆட்கொண்ட சிறியார் தமக்கு
விகர்மமே சாலச்சிறந்த தர்மம்மென தெரியாரோ?

விளக்கம்: ஈதலும் ஒருவகையில் கர்மமேயாகும் என்ற அகத்திலே (உள் உணர்விலே) அறியப்படும் ஆன்மசோதியை கண்டவர்தம் விளக்கம், வெளியுலகில் பொருள் தேடுவோர் அறியமாட்டார்கள். செயல்களுக்கு எதிர்செயல்கள் செய்யும் போக்கால் உழன்ற அறிவிலார்க்கு, விகர்மமே (செய்லை செய்யாதிருத்தல்) சிறந்த ஒரே தர்ம மார்க்கம் என்று தெரிந்துதான் இருக்குமோ?

விதியில் சாக்கியர் சமணர் முண்டர் ஆரியர் சூரியர்
என விரியும் பாதியில் முளைத்த பற்பல சாதிகள் ,
தன்னெஞ்சு தன்னில் தொற்றினதே சொல்லுகையில்,
பத்மமெனத்திகழ் பரஞ்சோதியின் பைங்கழல் பிடிப்பதறியாரே !

அருளின் தழல்தனில் குறுகிக்கழல் பற்றினிற்றல்
சாத்திரம் படைத்தோர் மார்கத்தில் பக்தியாம்
பலனியற்றா கர்மம் விகர்மமேவென யோகமாம்
நன்நட்பியற்றல் நன்மகள் துணையிருத்தல் அதிலுச்சமாம்!

விளக்கம்: அருள் சோதியாக ஓங்கி உயர்ந்த பிழம்பின் கழல்தனை (பாதத்தினை) பற்றுதல், சாத்திரம் சொன்ன சான்றோர் வாக்கின்படி பக்திமார்க்கம் எனப்படும். பலனையே எதிர்பாராமல் கருத்தாகச் செய்யப்படும் கர்மமானது, கர்த்தாவை அண்டாது. அது கர்த்தாவிற்கு விகர்மமே (கர்மம் செய்யாத நிலை) ஆன கர்மயோகம் ஆகும். நல்ல நண்பர்களின் நட்பும், நல்ல தம் மனையாளே துணையாக கிடைத்தால், அது யோகத்தில் உச்சமாகும்.

நன்நட்பென்பதன் நற்பொருள் யாதும் காசிநியோர் உணராரே !
உடலுக்கே கரைந்து நைந்து தமக்கென்று வாழ்ந்து வீழ்வார் !
அடிமைத்திறமதன் பொருள் அறிவார், ஆண்டனை அறியாதாரிவர்,
கண்ணன் தாம் மொழிந்தவற்றை நீர் கூறினால் ஏற்பரோ ?

ஏற்பதற்கோ எம்மான் மொழிந்த ஞாலம்
ஏற்றவன் ஏற்றதன் கூற்று அறியுமுன்னே
ஏற்றம் கொள்ளவா அவணியில் எழுந்தேன்
எந்தை எமக்குரைத்த எதிர்வினைநோக்கா பகர்வு

விளக்கம்:
Tags:
  1. No comments yet.
  1. No trackbacks yet.
You must be logged in to post a comment.