பிணைப்பு
இச்சையின்றி இம்மியும் நகராது,
பிச்சையின்றி கலையும் சேராது,
காயமின்றி எண்ணங்கள் வாராது,
சாயமின்றி வண்ணங்கள் சேராது,
ஸ்தூலமின்றி இவ்வுலகம் இராது,
ஞாலமின்றி அவ்வுலகம் இராது.
- ஒரு தூசி கூட நகரவேண்டும் என்றால், உந்துதல் தேவைபடுகிறது; ஆசையில்லாமல் உந்துதல் இல்லை.
- ஒரு கலையை கற்றுணரவேண்டுமேனில், அதை தகுந்த ஆசானிடத்தில் வேண்டித்தான் பெறவேண்டியிருக்கிறது.
- உடலில் ஒட்டிகொண்டிருக்கும்வரை தான் எண்ணங்களும் ஒருவனிடம் இருக்கும், உடலை பிரிந்ததும் எண்ணங்கள் மறைந்துவிடும்.
- அருளாகிய வண்ணம் ஒருவனிடம் சேரவேண்டுமெனில், குருவாகிய சாயம் அவசியம் (குருவே அருளும் ஆவார்).
- பௌதிக உடலுள்ளவரை தான் இந்த உலகத்தில் இருக்கமுடியும், சூட்சம உடலிலும் இருக்கமுடியும்.
- ஞானமடைந்த (உணர்ந்த) பின் மட்டுமே, ஆனந்திருக்க முடியும்.
பிண்டமின்றி ஜீவன்கள் கிடையாது,
அண்டமின்றி சிவனே கிடையாது,
ஒலியின்றி கேள்வி கிடையாது,
வலியின்றி வேள்வி கிடையாது,
கருவியின்றி கர்மம் கிடையாது,
அருவியின்றி தர்மம் கிடையாது.
- எல்லா ஜீவராசிகளும் இவ்வுலகில் தோன்ற எடுக்கும் (கருப்பையில்) முதல் உருவமே பிண்டம் ஆகும்.
- அண்டம் மட்டுமே இயல்பு நிலையிலே இருக்கிறது, இயல்பு நிலையின் இன்னொரு நாமமே சிவன் என்பதாகும்.
- ஒலியில்லாமல், கேள்விகளும் அன்று, பதில்கலும் அன்று, கேள்வி ஞானமும் அன்று.
- முயற்சிகள் தோற்பதும், பின் மேம்படுவதும், வலிகளும், வெற்றிகளுமின்றி வேட்கையுமில்லை, வேள்வியுமில்லை.
- ஒரு செயலாகிய கர்மம் நடக்க, கருவியாகிய கர்த்தா தேவை.
- அருவிபோல மேலிருந்து கீழே தரப்படுவதுதான் தர்மம் (தானம்) ஆகும்.
ஏணியின்றி உயர்வு இல்லை,
கேணியின்றி பகிர்வு இல்லை,
கோபமின்றி சாபம் இல்லை,
லோபமின்றி லாபம் இல்லை,
காமமின்றி காதல் இல்லை,
சாமமின்றி பாடல் இல்லை.
- ஏணியாக அருளும், படிகளாக உதவியும் இல்லையெனில் முன்னேற்றம் கிடைக்காது.
- எடுக்க எடுக்க கொடுக்கும் கேணிதான் மனிதன் தோற்றுவித்த முதன்மையான பகிர்வு முறை.
- குரோதம் இல்லாமல் வன்சொல்லாகிய சாபமில்லை.
- சுயநலமாகிய லோபமில்லையெனில் லாபம் பார்ப்பது கடினமே. வாழ்வியலில், எல்லாருக்குமே நல்லவராக இருக்க முடியாது.
- காமம் இல்லாத காதல், காதல் அன்று. வெறும் அன்பே ஆகும்.
- சாம வேதமில்லாமல் பக்தி மார்கமில்லை. சாமம், தியான-வழிபாடு-பக்தி-ஆராதனை வழிமுறைகளை தொகுக்கிறது.
இவ்வுலக வாழ்வில், எல்லாவுமே ஒன்றோடு ஒன்று சார்ந்தே இருக்கக்கடவது.
இதை புரிந்து அனுசரித்து நடக்க, வாழ்க்கையில் இன்பம் மட்டுமே மிஞ்சும்.
Powered by ScribeFire.
